Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒளவைக்குத் தந்த நெல்லிக் கனி - உண்மையான தமிழ் கதைகள்

அதியமான் அஞ்சி என்னும் மன்னன் தகடூரை ஆட்சி செய்து வந்தான். இவன் தமிழின்பால் மிகுந்த பற்று கொண்டவன். தன்னை நாடி வரும் புலவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து அவர்களுக்குப் பரிசுகளை அளித்து வாக்குவிப்பான், இவன் வீரத்திலும் சிறந்தவன். இவன் பெயரைக் கேட்டால் பகையரசர்கள் அஞ்சி நடுங்குவார்கள். இவன் பல சிற்றரசர்களையும் பேரரசர்களையும் போரில் வென்று, தன் நாட்டைப் பலம் பொருந்திய நாடாக அமைத்துக் கொண்டான். இதனால் இவன் புகழ் தமிழகமெங்கும் பரவியது.

                இவனது அரண்மனைக்கு ஔவையார் எனும் பெரும்புலவர் இவனிடம் பரிசில் பெற்றுச் செல்ல வந்திருந்தார். இவரது புலமையை நன்கு அறிந்த அதியமான், அவரைத் தன்னோடு தங்க வைத்தான். புலவருக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுத்தான். புலவரும் இவனது வீரத்தையும் சிறந்த பண்புகளையும் பாடல்களாகப் பாடினார். மன்னனும் அவற்றைக் கேட்டு மகிழ்ந்தான். இவ்வாறு மாதங்கள் பல கழிந்தன.

ஆனால் புலவருக்கு மனத்தில் பெரும் வருத்தம் இருந்தது.  மன்னன் நமக்குப் பரிசில் எதுவும் தரவில்லையே. அப்படித் தந்தால் தானே நாம் நமது நாட்டிற்குச் செல்ல முடியும்' என்று வருந்தினார். வருத்தம் கோபமாக வெடித்தது. எனவே, மன்னனின் காவலர்களிடம்மன்னன் எனக்குப் பரிசுகள் ஏதும் தரவில்லை. ஆகவே, இனி நான் இங்குத் தங்கப் போவதில்லை" என்று கூறிவிட்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டார்.

செய்தி அறிந்த மன்னன், ‘புலவரின் கோபத்திற்கு நான் ஆளாகி விட்டேனே' என்று அஞ்சி அவரிடம் ஓடிச் சென்றான். படை பலம் மிக்க பகை மன்னரைக் கண்டு அஞ்சாத அதியமான், புலவர் ஔவையாருக்கு அஞ்சி அவரைத் தேடி ஓடினான். ஔவையைச் சந்தித்தான்.

அம்மையீர், என்னை மன்னித்து விடுங்கள். நான் தங்களுக்குப் பரிசில் கொடுக்காமல் இருந்து தங்களை அவமதித்து விட்டேன் என்று தவறாக எண்ணி விட்டீர்கள். ஆனால் நான் பரிசில் கொடுத்து விட்டால் தாங்கள் என்னை விட்டுப் பிரிந்து விடுவீர்களே! உங்கள் தமிழ்க் சுவிதைகளைக் கேட்க முடியாமல் போய்விடுமே என்ற அச்சத்தால்தான் பரிசு கொடுப்பதற்குக் காலம் தாழ்த்தினேன், இதோ இருக்கும் பொருள்களை யெல்லாம் தாங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று விலையுயர்ந்த பரிசுகளை வாரி வழங்கினான். 'அதியமானின் நல்ல உள்ளத்தை நாம் தவறாகப் புரிந்து கொண்டோமே' என்று ஔவையார் மிகவும் மனம் வருந்தினார். அதன் பின்னர் நீண்ட காலம் அதியமானது அரண்மனையில் தங்கி இருந்து பல பாடல்களைப் பாடினார். மன்னனும் கேட்டு மகிழ்ந்திருந்தான்.



ஒரு சமயம் அதியமான் மலைவளம் காணச் சென்றிருந்தான், அப்போது அங்கிருந்த நெல்லி மரத்தில் ஓர் அபூர்வ நெல்லிக்கனியைக் கண்டான். அதை உண்டால் பல காலம் நோய் நொடியின்றி நலமாக வாழ முடியும் என்று அறிந்தான், உடனே அதை எப்படியும் பறித்து உண்டுவிட முடிவு செய்தான். மிகவும் சிரமப்பட்டு மலையின் உச்சிக்குச் சென்று அந்நெல்லிக் கனியைப் பறித்தான். அதை உடனே உண்டுவிடத் தீர்மானித்து, வாயருகே கொண்டு சென்றான். அப்போது அதியமானுக்குத் திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. 'ஆம்! நாம் அக்கனியை உண்டு நீண்ட காலம் வாழ்ந்தால் நமது நாட்டுக்கு மட்டுமே நன்மை செய்ய முடியும். ஆனால் புலவர் ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்திருந்தால், தமிழுக்கு அவரால் பல கவிதைகள் கிடைக்கும். அதனால் தமிழின் புகழ் சிறக்கும்' என்று எண்ணினான். உடனே அந்தக் கனியைத் தான் உண்ணாது, புலவர் ஔவையாரிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

 'அக்கனியின் சிறப்பைக் கூறினால் புலவர் உண்ண மறுத்து விடுவாரோ' என்று எண்ணி, அவரிடம் அக்கனியின் சிறப்பைச் சொல்லாது மறைத்தான். புலவர் அக் கனியை உண்ட பிறகே கனியின் சிறப்பைக் கூறினான். இதைக் கேட்ட புலவரின் மனம் நெகிழ்ந்தது. மன்னன் அதியமான் தமிழின்பால் கொண்ட பற்றுதலும் தன்மீது கொண்ட அன்பும் எத்தகையன வென்று உணர்ந்தார். அதியமானது பெருமை குறித்தும் உயர் கொடை குறித்தும் பல பாடல்கள் பாடினார்.

ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்துப் புகழ் பெற்ற அதியமானின் புகழ் இன்றும் தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது. 

Post a Comment

0 Comments