Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடு காத்த நங்கை - தமிழ் கதைகள்

 


சித்தூர் என்பது இந்தியாவின் வரலாற்றில், அதிலும் குறிப்பாக இராசபுதானத்தின் வரலாற்றில் என்றும் இடம் பெற்றிருக்கும் ஓர் இடமாகும். அந்நாட்டின்மீது அடிக்கடி பகைவர் படையெடுப்புகள் இருந்தன. போர் சர்வசாதாரணமாக இருந்தது. சித்தூர் மன்னர்களும் மக்களும் சிறிதும் ஊக்கம் குன்றாமல் நாட்டின் சுதந்திரத்தைக் காத்து வந்தனர், மக்கள் அனைவரும் நாட்டுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்க ஆயத்தமாயிருந்தனர். சித்தூரை இராச சேகர சிங் என்றொரு மன்னர் ஆண்டு வந்தார். நாட்டுமக்கள் அவர்மீது அளவற்ற அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். அவரும் நெறி தவறாது ஆட்சி நடத்தி வந்தார். அவரது புகழ் பிற நாடுகளிலும் பரவியது. இதனால் பொறாமை கொண்ட சில மன்னர்கள் ஒன்று சேர்ந்து திடீரென முறையற்ற வழியில் சதி செய்து அவரைக் கொன்றனர். அரசி படுத்திருந்த மாளிகைக்கும் தீ வைத்தனர்.

இந்த நிகழ்ச்சி நடு இரவில் திடீரென்று நடந்ததால் நாட்டுமக்கள் இதை உணர முடியவில்லை. அரசியும் தீயில் வெந்து இறந்தார். இத்தனையும் நடந்த நேரத்தில் வேறு ஓர் அறையில் இரண்டு குழந்தைகளும் ஒரு பெண்ணும் இருந்தனர். இரண்டு குழந்தைகளுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். ஒன்று செல்வச் சிறப்புடன், ஆடை அணிகளுடன் காணப்பட்டது. தங்கத் தொட்டிலில் படுத்து அழுதுகொண்டிருந்த அக்குழந்தைக்கு விளையாட்டுக்காட்ட முயன்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். சாதாரண அணிகளுடன் காணப்பட்ட இன்னொரு குழந்தை கீழே படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது.  அப்போது சேவகன் ஒருவன் உருவிய வாளுடன் அங்கு வந்துபுன்னா, உடனே புறப்படு! மன்னரும் அரசியும் கொலை செய்யப்பட்டு விட்டனர். அதோ பார், அரசியின் மாளிகை எரிகிறது! எழுந்திரு! எப்படியாவது இளவரசரைக் காப்பாற்ற வேண்டும். உடனே வேண்டியதைச் செய்என்றான். அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. மன்னரும் அரசியும் இறந்து விட்டது அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது. அப்படியே கல்போல் உட்கார்ந்து விட்டாள், வந்தவனுக்கு அளவுக்கு மீறிக் கோபம் வந்துவிட்டது. “புன்னா, மனம் இடிந்து உட்கார இதுவா நேரம்? செய்ய வேண்டியதைச் செய்என்றான்.

அவள் ஐயத்துடன் பார்த்தாள். “ஐயப்பட நேரம் இல்லை, மன்னர் குடும்பமே அழிந்துவிட்டது என்று எதிரிகள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் தீவினை காரணமாக ஒரே ஒருவன், இளவரசர் உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டு விட்டான். அதனால் இளவரசரையும் கொலை செய்வதற்காகத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள், அதற்குள் இளவரசரைக் காப்பாற்ற வேண்டும்."

புன்னாவும் அந்த வீரனும் சிறிது நேரம் யோசித்தனர். அரண்மனைத் தாதிப்பெண் புன்னா, அந்த வீரனுக்கு மனைவி. இருவருமே அளவு கடந்த நாட்டுப்பற்று உடையவர்கள். அரசி தூங்கும்போது குழந்தை அழுததால், அதற்குப் பால் கொடுக்கத் தூக்கி வந்தாள். இல்லையென்றால் பகைவர் எண்ணியதுபோல் குழந்தையும் அரசியுடன் தீயில் வெந்து இறந்திருக்கும்? குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது என்று யோசித்தவளுக்குப் பழக்கூடை ஒன்று கண்ணில் பட்டது.

இளவரசரைத் தூக்கிவந்து உயர்ந்த ஆடைகளை அகற்றினாள். சாதாரண உடையை உடுத்திப் பழக்கூடையில் படுக்க வைத்தாள். இதற்குள் குழந்தை தூங்கிவிட்டது. அதன்மேல் பூச்செண்டுகள், மலர்கள் மற்றும் பழங்களைப் போட்டுப் பழக் கூடைபோல் செய்தாள். அதைக் கணவன் கையில் கொடுத்தாள்.

நீங்கள் உடனே இக்கூடையை எடுத்துக்கொண்டு வெளியேறி விடுங்கள். இடையில் யாருடனும் போரிட வேண்டாம். நான் இங்கு வருபவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டுக் காட்டுக்கு வந்து விடுகிறேன். இதுதான் நாம் உடனே செய்யவேண்டியது. நான் வரமுடியாவிட்டால் நீங்கள் இளவரசரை வளர்த்து ஆளாக்கி, இந்த நாட்டின் மன்னராக்க வேண்டும். அதுவே என் விருப்பம்என்றாள். அவள் கண்கள் கண்ணீரை அருவியெனப் பெருக்கின.

தன் மனைவியையும் குழந்தையையும் ஆபத்தில் விட்டுப் பிரிய அந்த வீரனுக்கு மனமில்லை. “புன்னா நீயும் நம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு என்னுடன் வந்துவிடு! இல்லையேல் அப்பாதகர்கள் கொன்று விடுவார்கள். என்னால்நீங்கள் இல்லாமல் வாழ முடியாது" என்றான்.

"இல்லை! நானும் குழந்தையும் உங்களுடன் வந்துவிட்டால், இளவரசர் உயிர் பிழைத்துவிட்டார் என்பதை உணர்ந்து, பகைவர் தேடிக் கண்டுபிடிக்க முயல்வார்கள். படைவலிமை கொண்ட அவர்கள் தேட ஆரம்பித்தால் நாம் தப்ப முடியாது. நீங்கள் இளவரசரோடு தப்பி விடுங்கள், இளவரசர் இறந்துவிட்டதாக அவர்களை நம்பச் செய்துவிட்டு குழந்தையுடன் வந்துவிடுகிறேன். நீங்கள் உடனே புறப்படுங்கள், நம் நாட்டின் நலம்தான் பெரிது. நமக்கு உப்பிட்ட மன்னருக்கும் அரசிக்கும் நாம் செய்யக்கூடியது இதுதான்! இது நமது கடமை!

என்றாள்.                                                                 

அந்த வீரனுக்கும் புன்னா சொல்வதுதான் சரியென்றுபட்டது. நாட்டுப்பற்றுடைய அவனுக்கும் தன் மனைவி குழந்தைகளைவிட இளவரசரைக் காப்பாற்றுவதே பெரிதெனப்பட்டது. தங்கள் குழந்தையுடன் தப்பி ஓடுவதனால் தங்களுக்கு மட்டுமே நன்மை ஏற்படலாம்! இளவரசரைக் காப்பாற்றினால் இந்த நாட்டிற்கே நல்லதல்லவா? அதனால் இருவரும் தங்கள் துயரை ஆற்றிக் கொண்டனர்.

இதற்குள் உரத்த குரலுடன் பலர் அங்குமிங்கும் ஓடுவது தெரிந்தது. அதற்குமேல் தாமதிக்க விரும்பாமல், கூடையை எடுத்துக்கொண்டு தான் போகும் இடத்தை மனைவியிடம் கூறிவிட்டு வெளியேறினான்.

புன்னா பகைவர்களை எதிர்கொள்ள ஆயத்தமானால், கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. ஒன்றும் புரியாமல் அவள் உட்கார்ந்திருந்தபோது குழந்தை விழித்துக்கொண்டு வீறிட்டு அலறியது? அவளுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. உடனே தன் குழந்தையைத் தூக்கிவந்து கையில் பழத்தைக் கொடுத்துவிட்டு, இளவரசருடைய ஆடைகளை அதற்கு அணிவித்தாள். அப்படியே அணைத்து முத்தமிட்டாள். இளவரசர் படுத்திருந்த தொட்டிலில் கிடத்தினாள். அதற்குள் பகைவர் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்தனர். “இளவரசர் எங்கே?" அவள் எதுவும் பேசவில்லை. அவர்கள் புகுந்து தேடலாயினர். தொட்டிலில் படுத்திருந்த குழந்தையைக் கண்டனர். உடனே ஓடிவந்து பகை மன்னர்களிடம் தெரிவித்தனர். வெறிபிடித்திருந்த அனைவரும் உடனே அக்குழந்தையைக் கொன்றுவிடும்படி கூறினர். புன்னா இந்தச் சொற்களைக் கேட்டதும் இடி ஓசை கேட்ட நாகம்போல் ஆயினாள். தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. வாயைத் திறந்து எதுவும் கூற முடியாத நிலை.

தொட்டிலில் இருப்பது தன் குழந்தை என்று கூறினால் அவர்கள் இளவரசரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்றுவிடுவார்கள். அப்படிக் கூறினாலும் தன் குழந்தை பிழைக்கும் எனக் கூற முடியாது. கொலை வெறிகொண்டவர்கள் இதையும் கொன்றுவிட்டு, இளவரசரையும் தேட ஆரம்பித்து விடுவார்கள். இப்போது பேசாதிருந்தால், இளவரசரைக் கொன்றுவிட்டதாக எண்ணிப் பேசாமல் சென்றுவிடுவார்கள். தன் கணவன் நிச்சயம் இளவரசரை ஆளாக்கி இவர்களைப் பழிக்குப் பழி வாங்கிவிடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அதனால் பேசாமல் இருக்க முடிவுசெய்தாள். அதற்குள் பகைவர் எண்ணிவந்த செயலை முடித்துவிட்டப் பெருமிதத்தில் மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.

ஒரு வீரன் தான் செய்த கோழைத்தனமான செயலைப் பகை மன்னர்களிடம் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அந்த வெறிபிடித்த மன்னர்களும் அவனது பெருவீரத்தைப் பாராட்டி 'சபாஷ்' என்றனர். புன்னா தன் குழந்தையைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள். அந்த இக்கட்டான நிலையிலும்நாட்டையும் இளவரசரையும் காத்துவிட்டோம்' என்ற மகிழ்ச்சியும் நிம்மதியும் அவளுக்கு ஏற்பட்டது. தன் குழந்தையையும் கணவனையும் எண்ணியபோது அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அரச தம்பதிகள் தங்களை ஆதரித்ததற்கு நல்ல முறையில் கைம்மாறு செய்துவிட்டதாகப் பூரித்தாள். நாட்டுக்காகக் கொலையுண்டு கிடக்கும் தன் குழந்தையைப் பார்த்ததும் பெண்புலியாகச் சீறி எழுந்தாள், அந்தக் கொலைக் கும்பல் அறையைவிட்டு வெளியேறும்போது குழந்தையைக் கொன்ற வீரன்மீது தன் இடுப்பிலிருந்த குத்துவாளை எடுத்து வீசினாள். அவன் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தான். ஆனால் உடனே மற்றொரு வீரன் வீசிய கட்டாரி புன்னாவின் நெஞ்சில் ஆழப்பாய்ந்தது. இந்நிலையில் குழந்தையை அணைத்தவண்ணம் அழுகையையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தாள். அவள் உயிர் நெடுநேரம் நீடிக்கவில்லை. அந்தத் தியாகச் சுடர் அணைந்தது!

இதுபோல் தியாகம் செய்ய யாருக்குத் துணிவு வரும். தான் பெற்ற குழந்தையைத் தாய் நாட்டுக்காகப் பறிகொடுத்தாள். தானும் உயிரை விட்டாள், சதிகாரர்கள் திரும்பிவிட்டனர். இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. மனைவியும் குழந்தையும் வராததைக் கண்ட பிரதாபன் இளவரசரைப் பாதுகாப்பாக ஒரு குகையில் மறைத்து வைத்துவிட்டு அரண்மனைக்கு ஓடினான்.

அரண்மனை எங்கும் பிணக்காடாக இருந்தது, மனைவியிடம் விடைபெற்ற அறையுள் புகுந்தபோது காலில் இடறிய வீரனின் உடலைப் பார்த்தான். அவனுடைய முதுகில் தன் பெயர் பொறித்த குத்துவாளைக் கண்டதும் தூக்கி வாரிப்போட்டது. அவனைத் தன் மனைவிதான் கொன்றிருக்கவேண்டும் எனப் புரிந்து கொண்டான். தன் பெயர் பொறிக்கப்பட்ட இரு குத்து வாள்களில் ஒன்று மனைவியிடம் இருந்தது அவனுக்குத் தெரியும். தன் மனைவியால் கொல்லப்பட்டவனை அருவருப்புடன் நோக்கிவிட்டு நகர்ந்தவனுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. தன் குழந்தை, இளவரசரின் ஆடை அணிகளுடன் இறந்து கிடப்பதையும் நெஞ்சில் பாய்ந்த கட்டாரியுடன் குழந்தையை அணைத்தபடி மனைவி இறந்து கிடப்பதையும் கண்டான். அவனுக்கு உண்மை விளங்கியது. இளவரசரைக் காப்பதற்காகத் தன் குழந்தையை அவள் பலியாகக் கொடுத்துவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டதும் அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. தன் குழந்தையைக் கொன்றவனை அவள் பழிவாங்கத் தவறவில்லை என்பதை உணர்ந்தபோது மனைவியைப் பற்றிப் பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவ்விருவர் உடல்களையும் அடக்கம் செய்துவிட்டுத் துயரச் சுமையுடன் வெளியேறினான். இளவரசரை ஆளாக்கி இத்தனைக்கும் காரணமானவர்களைப் பழிவாங்கித் தன் கடமையைச் செம்மையாக நிறைவேற்ற அப்போதே உறுதி பூண்டான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் பிரதாபன் தன் மனைவியையும் குழந்தையையும் நினைத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அரசர் கெய்ரோன், பிரதாபனின் நிலையை உணர்ந்து, "அப்பா.... ! நடந்ததை மறந்துவிடுங்கள். நான் உங்கள் மகனப்பா...! மன்னரும் அரசியும் என்னைப் பெற்றெடுத்தபோதிலும், என் உயிரைக் காத்த உங்கள் மனைவியும், இத்தனை நாள் வளர்த்து என்னை மன்னனாக்கியதோடு, என் பெற்றோரைக் கொன்ற மாற்றாரைப் பழிவாங்க வழி செய்துகொடுத்த நீங்களுமல்லவா என் தாய் தந்தையர்? அம்மாவின் பெயரில் அம்மாவின் பெயரில் ஓர் ஆலயம் கட்டி முடித்துள்ளேன் அப்பா! இன்றுதான் அதன் திறப்பு விழா. கட்டும் முன் உங்களுக்குத் தெரிந்தால் தடை செய்வீர்கள் என்று நான் கூறவில்லை, மன்னித்து விடுங்கள். புறப்படுங்கள்...!'' என்றார்.

பிரதாபனுக்கு மகிழ்ச்சியும் வருத்தமும் ஏற்பட்டன. இருவருமாக அந்த ஆலயத்திற்குச் சென்றனர். அங்குப் பெண் ஒருத்தி, தன் குழந்தையுடன் நிற்பதுபோல் சிலை செதுக்கப்பட்டிருந்தது. கோவிலின் சுற்றுப்புறத்தில் தன்னுடைய சொந்த வரலாற்றை, தான் காப்பாற்றப்பட்ட நிகழ்வுகளை அப்படியே செதுக்கியிருந்தார் மன்னர் கெய்ரோன்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற சில நாள்களுக்குப் பிறகு பிரதாபன் இறந்தான். பிரதாபன் உடலை அக்கோவிலில் அடக்கம் செய்து, பிரதாபனைப் போலவே ஒரு சிலை செய்து வைத்தார் கெய்ரோன்.

இன்றும் சித்தூர் செல்பவர்கள், அந்தக் கோவிலைக் காணலாம். இடிந்துபோன நிலையிலிருக்கும் அந்தக் கோவிலும் சிலையும், ஒரு குடும்பத்தின் தியாக வரலாற்றைக் கூறுவதாக இன்னும் இருக்கின்றன.

(எல்லார் எழுதிய நற்பண்புக் கதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

Post a Comment

0 Comments