Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நான் செலவு செய்த விதம்- அற்புதமான தமிழ் கதைகள்

 


ஒரு நாள் காலையில் அரசர் தம் நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார். வழி இடையே, வயல் வெளியில் உழவன் ஒருவன் மகிழ்ச்சியோடு பாடியவாறு தன் வேலையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். உழவனின் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தைத் தெரிந்துகொள்ள அரசர் விரும்பினார். எனவே உழவனிடம், “நீ ஒரு நாளில் எவ்வளவு சம்பாதிக்கிறாய்?” என்று கேட்டார்.

அரசே! ஒரு நாளில் நான் நான்கு பணம் சம்பாதிக்கிறேன்"

அதை நீ எப்படிச் செலவு செய்கிறாய்?"

ஒரு பணத்தில் சாப்பிடுகிறேன், ஒரு பணத்தைக் கடனாகக் கொடுக்கிறேன். இன்னொரு பணத்தால் கடனை அடைக்கிறேன். மற்றொரு பணத்தை எப் பயனும் கருதாமல் பிறருக்குக் கொடுக்கிறேன்

உன் புதிர்ப் பேச்சு எனக்குப் புரியவில்லை. விளக்கமாகச் சொல்!"

மன்னர் பெருமானே! ஒரு பணத்தை நானும் என் மனைவியும், உண்ணவும் உடுக்கவும் செலவு செய்கிறேன். ஒரு பணத்தைப் பிற்காலத்தில் என்னையும் என் மனைவியையும் பாதுகாக்கக்கூடிய என் பிள்ளைகளுக்குச் செலவு செய்கிறேன்."

மூன்றாவது பணத்தால் என்ன கடனை அடைக்கிறாய்?“அதைக் கொண்டு என் பெற்றோருக்கு உணவு அளித்துப் பாதுகாக்கிறேன். அரசே! என்னைப் பிள்ளைப் பருவத்தில் பேணிப்பாதுகாத்து வளர்க்க அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்? அதை ஈடுசெய்யும் வகையில் நான் செயல்படா விட்டால், நன்றி கொன்றவன் ஆகிவிட மாட்டேனா? அவர்கள் எனக்கு எவ்வளவு செலவு செய்திருப்பார்கள்? அந்த அளவுக்கு நானும் செலவு செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டாமா? ஆகவே, என் பெற்றோரைப் பாதுகாக்கச் செய்யும் செலவைத்தான்கடனை அடைக்கிறேன் ' என்று சொன்னேன்."

நீ சொல்வது முற்றிலும் உண்மை! நான்காவது பணத்தை யாருக்குக் கொடுக்கிறாய்? எதற்குச் செலவு செய்கிறாய் என்பதை அறிந்துகொள்ள நான் ஆவலோடு இருக்கிறேன்என்றார் அரசர்.

மன்னவ நான்காவது பணத்தை ஆதரவு இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகக் கருணையோடு செலவு செய்கிறேன். அவர்களிடத்தில் என்ன பயனை எதிர்பார்க்க முடியும்?"

உன் விவேகத்தை நான் பாராட்டுகிறேன், நீ எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும்"

என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்...... அரசே"

நான் சொல்வதைக் கேட்டு, அதன்படி நீ நடந்தால் உனக்கு நான் சன்மானமாக நூறு பொற் காசுகள் தருவேன்"

அரசே! தாங்கள் ஆணை இட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கு உண்டு. தங்கள் சொற்படி நடந்தால் நூறு பொற்காசுகளைச் சன்மானமாகத் தருவதாக வேறு கூறுகிறீர்கள், கரும்பு தின்னக் கூலி கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்? நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்"

என் முகத்தை நூறுதடவை பார்க்கின்ற வரையில் இப்போது என்னிடம் கூறிய புதிர்ச் செய்தியைப் பற்றி யாரிடமும், உன் மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார், உறவினரிடமும்கூடப் பேசக்கூடாது. மீறிப் பேசினால், நான் உன்னைக் கடுமையாகத் தண்டிக்க நேரிடும். உன் சம்பாத்தியமும் செலவும் குறித்த புதிரான பேச்சையும் அதன் விளக்கத்தையும் யாரிடமும் கூறாமல், ரகசியமாகக் கருதிப் பாதுகாப்பேன் என்று எனக்குச் சத்தியம் செய்து கொடுஎன்று அரசர் கேட்டார்.

அரசே! உங்கள் விருப்பப்படியே சத்தியம் செய்கிறேன். நிச்சயமாக ரகசியத்தைப் பாதுகாப்பேன்என்று விவசாயி உறுதி அளித்தான்.

சத்தியத்தைக் காக்கத் தவறினால் கடுமையான தண்டனைக்கு ஆளாவாய் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள். அதுமட்டுமில்லை, நீயாக வலிய என்னைத் தேடிவந்து பார்க்கக் கூடாது. தற்செயலாக மட்டுமே பார்க்க வேண்டும். நூறுமுறை பார்த்த பிறகே இச் செய்திபற்றிப் பேச வேண்டும் தெரிந்ததா?” என்றார் அரசர்,

அரண்மனை திரும்பிய அரசர் அவையைக் கூட்டினார்.

அமைச்சர்களே! அவையில் உள்ளவர்களே! நான் கூறும் செய்தியைக் கவனமாகக் கேளுங்கள். நான்கு பணம் சம்பாதிக்கும் ஒருவன், அந்த நான்கு பணத்தில் ஒரு பணத்தைத் தனக்காகச் செலவு செய்கிறான். ஒரு பணத்தைக் கடனாகக் கொடுக்கிறான். ஒரு பணத்தால் கடனை அடைக்கிறான். ஒரு பணத்தைப் பயன் கருதாச் செலவுக்கு அளிக்கிறான். இந்தச் செய்தி ஏதோ புதிர்போல் இருக்கிறது அல்லவா? உண்மையில் இது ஒரு புதிர்தான். இந்தப் புதிரின் உள்ளடக்கத்தை உங்களில் யார் வேண்டுமானாலும் விடுவிக்கலாம்! இதற்கு ஒரு நாள் கால அவகாசம் கொடுக்கிறேன். புதிரை விடுவிப்பவருக்கு நூறு பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும்" என்று அரசர் கூறினார். புதிருக்குரிய விடை தெரியாமல் அமைச்சர்களும் மற்றவர்களும் விழித்தார்கள். அந்த அமைச்சர்களுள், உழவன் ஒருவனிடம் அரசர் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்த அமைச்சர் ஒருவர் மட்டும், விரைவாக அந்த உழவனைத் தேடிப் புறப்பட்டார். அந்த உழவனை நெருங்கிச் சென்று, தம்மை அறிமுகம் செய்துகொண்ட அமைச்சர்,

நீ அரசரிடம் சொன்ன புதிருக்கு உரிய விடையை, நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றார். உழவன் வாயைத் திறக்காமல் நின்றிருந்தான்.

உழவனின் மௌனத்தைக் கலைக்கஇங்கே நீயும் நானும் மட்டும்தானே இருக்கிறோம்! நான் யாரிடமும் நீ சொன்னதைப் பற்றிக் கூறமாட்டேன், கவலைப்படாதே! நான் அந்தப் புதிரை விடுவித்தால், அரசர் என்னைப் பாராட்டுவார். அரச சபையில் என் மதிப்பு உயரும்.

தயவு செய்து சொல்லிவிடுஎன்றார் அமைச்சர்.

அமைச்சரே, உமக்குப் பாராட்டுக் கிடைக்கும்! அரசருக்குத் தெரிந்தால் எனக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்."

அப்படியானால் எப்போதுதான் நீ புதிருக்கு உரிய பதிலை வெளியில் கூறுவாய்?” என்று கேட்டார் அமைச்சர், உழவன் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தடுமாறினான். பின்னர், “அமைச்சரே! நான் அரசரின் முகத்தை நூறு தடவை தற்செயலாகப் பார்ப்பதற்குமுன் அதைப் பற்றி எவரிடமும் பேசமாட்டேன் என்று அரசரிடமே சத்தியம் செய்துள்ளேன். செய்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டியது நல்ல குடியானவனின் கடமை அல்லவா? என்னை மன்னித்து விடுங்கள்என்றான்.

அமைச்சர் விடுவதாக இல்லை. அமைச்சர் மூளையில் சிறு பொறி தட்டியது. அமைச்சர் அல்லரோ? கிடைத்த இழையைப் பிடித்துக் கொண்டு ஏற ஆரம்பித்தார். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைத் தெளிவாக உணர்ந்தவர் அமைச்சர். முயன்றால் முடியாதது உண்டா? அமைச்சர் புதிய முயற்சியை மேற்கொண்டார். ‘புதிரை விடுவித்தால் அரசர் நூறு பொற் காசுகளைப் பரிசாகத் தருவார். இந்த முயற்சியில் நமக்கு எதுவும் இழப்பு இல்லை! ' என்று அமைச்சர் முடிவு செய்தார்.

உழவனை நோக்கி, “நீ அரசரின் முகத்தை நூறு தடவை தற்செயலாகப் பார்த்துவிட்டால் புதிர்ச் செய்தியைக் கூறிவிடுவாய் அல்லவா?” என்றார்.

"அமைச்சரே, அதில் என்ன சந்தேகம்! நூறு தடவை தற்செயலாக அரசரின் முகத்தைப் பார்த்துவிட்டால் கூறிவிடலாமே! அரசரிடம் செய்த சத்தியமும் அதுதானே.''

நான் இப்போதே ஏற்பாடு செய்கிறேன். அரசரின் முகம் பொறித்த நூறு பொற் காசுகளை நான் உனக்குத் தருகிறேன், அவற்றை ஒவ்வொன்றாக எண்ணினால், அரசரின் முகத்தை நூறு முறை பார்த்ததாகி விடும். அதன் பிறகு அந்தப் புதிருக்கு உரிய விடையை என்னிடம் சொல்லலாம் அல்லவா?" என்று கூறி, அரசரின் முகம் பொறித்த நூறு பொற் காசுகளை அமைச்சர் கொடுத்தார். அவற்றை எண்ணி முடித்த குடியானவன் புதிருக்குரிய விடையை விளக்கினான், அமைச்சர் மகிழ்ச்சியோடு தம் இருப்பிடம் திரும்பினார்.

மறுநாள் அரச சபை கூடியது. அமைச்சர் எழுந்து புதிரை விடுவித்தார். ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த அரசர், ஒருவாறு காரணத்தை ஊகித்துச் சினங்கொண்டார். உழவன் சத்தியம் தவறிவிட்டதாக எண்ணி அவனை இழுத்துவரச் செய்தார். அரசர் முன்நின்ற உழவன், “வேந்தே! நான் செய்த சத்தியத்தை இறுதிவரை காப்பாற்றியுள்ளேன். தவறிவிடவில்லை. அமைச்சர்' எனக்கு அளித்த நூறு பொற் காசுகளில் தங்களின் முகத்தை நூறு தடவை தற்செயலாகத் தரிசித்தேன். அதன்பிறகே அமைச்சரிடம் புதிருக்குரிய விளக்கத்தைக் கூறினேன். இதோ, அமைச்சர் எனக்கு அளித்த நூறு பொற் காசுகள் " என்று கூறினான்.

! அப்படியா செய்தி? நீ புத்திசாலி மட்டும் அல்லன்; தெளிவானவனும் கூட! அவற்றை நீயே வைத்துக்கொள், நான் உன் புத்திசாலித் தனத்திற்காக நூறு பொற் காசுகள் தருகிறேன். கொடுத்த வாக்கை மீறாமைக்காக மேலும் நூறு பொற் காசுகளை வெகுமதியாக அளிக்கிறேன்" என்று அரசர் கூறினார்.

மன்னர் பெருமானே! நான் தங்களுக்குப் பெரிதும் நன்றியுடையவன் ஆவேன்! தங்களால் எனக்கு முந்நூறு பொற்காசுகள் கிடைத்துள்ளன. என்னுடைய மனைவி, மக்கள், பெற்றோரை எல்லாம் நன்றாகக் காப்பாற்றுவேன். மேலும் அதிகமாக ஏழைகளுக்கு உதவி செய்வேன். அதனால் தங்கள் பேரன்புக்கு அவர்கள் பெரிதும் நன்றி செலுத்துவார்கள்" என்று கூறிவிட்டு, உழவன் மகிழ்ச்சியுடன் அரச சபையிலிருந்து அரசர் முதலிய அனைவரையும் வணங்கிவிட்டு வெளியேறினான்.


Post a Comment

0 Comments