Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதையல் யாருக்கு? - தமிழ் கதைகள்

 


செங்குன்றம் என்ற சிறிய பகுதியை ஆதித்தன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். ஆதித்தன் தம் குடி மக்களிடம் மிகுந்த அன்புடையவராக இருந்தார்.

ஒரு நாள் அரச சபை கூடியபோது, மன்னர்அமைச்சரே, நான் நமது மக்களில் ஒருவருக்குப் புதையல் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கப் போகிறேன். அந்தப் புதையல் பரிசின் மூலம் நமது மக்களுள் யாருக்குச் சேவை மனப்பான்மை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளப் போகிறேன்" என்றார்.

அதற்கு அமைச்சர், "அரசரே தாங்கள் கூறுவது என் அறிவுக்கு எட்டவில்லையே? புதையல் என்கிறீர்கள், பரிசு என்கிறீர்கள், சேவை மனப்பான்மை என்கிறீர்கள்....." என்று குழம்பினார்.

"அமைச்சரே, சற்றுப் பொறுமையாக இருந்து என்ன நடக்கிறது என்று கவனியுங்கள்" என்று கூறினார்.

சில நாள்களுக்குப் பிறகு மக்கள் அனைவருக்கும், 'நமது நாட்டு எல்லைக்குள் புதையல் இருக்கிறது, அதைத்தேடி எடுப்பவர்களுக்கே அந்தப் புதையல் சொந்தம்' என்று அறிவிக்கப்பட்டது.

மக்கள் அனைவரும் 'புதையல் எங்கே?' என்று எல்லா இடங்களிலும் தேடலாயினர்.

எங்குப் பார்த்தாலும் இந்தப் புதையல் குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டது. மூலை முடுக்கெல்லாம் மக்கள் புதையலைத் தேடலாயினர்.

அப்பகுதியில் முக்கியமான பெரிய வீதியின் நடுவில் ஒரு பெரிய கல் கிடந்தது. அந்தக் கல் போவோர் வருவோருக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்தது. போக்குவரத்திற்கு இடைஞ்சலாகக் காணப்பட்ட அந்தக் கல்லை யாரும் அப்புறப்படுத்தவில்லை. எல்லோரும் அந்தக் கல்லைச் சுற்றிச் சுற்றியே ஒதுங்கி நடந்து கொண்டிருந்தனர்.

ஒருநாள் மாணவன் ஒருவன் அந்த வீதி வழியே வந்து கொண்டிருந்தான். அவன் அந்தக் கல்லைக் கண்டவுடன், அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து "ஏனய்யா? எத்தனை முறை இந்தக் கல்லைக் கடந்து போகிறீர்கள்? யாருக்காவது இந்தக் கல்லை அப்புறப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதா?  இந்தக் கல் நடுவீதியில் கிடப்பது போக்குவரத்திற்கு எவ்வளவு இடையூறாக இருக்கிறது" என்றான்.

அதைக் கேட்ட வழிப்போக்கன் ஒருவன்,  "அட போப்பா! எங்கள் வேலையையே நாங்கள் பார்க்க முடியாமல் இருக்கிறோம். இதில் அரசர் புதையல் வேறு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

அதை வேறு தேடவேண்டும்" என்று சலித்துக்கொண்டு, "தம்பி வெளியூரா?" என்று கேட்டான்.

"ஆமாம் ஐயா, நான் வெளியூரில் படித்துக்கொண்டிருக்கிறேன். விடுமுறைக்காக இங்கு வந்திருக்கிறேன்" என்று கூறினான், மாணவன்.

"அப்படியா?'' என்று கேட்டுக் கொண்டே அந்த வழிப்போக்கன் சென்று விட்டான். பிறகு அந்த மாணவன் அருகில் நின்ற நண்பன் ஒருவனை அழைத்து, “நண்பா, எனக்குக் கொஞ்சம் உதவி செய், இந்தக் கல்லை அப்புறப்படுத்துவோம்.

இந்தக் கல் இல்லையென்றால் போக்குவரத்து சீராக இருக்கும்" என்றான்.

அவனும், "சரி" என்று உதவ முன்வந்தான்.

எப்படியோ இருவரும் சேர்ந்து அந்தக் கல்லை மெதுவாக நகர்த்தி ஒரு ஓரமாய்த் தள்ளிக் கொண்டுபோய் விட்டனர், அதன் பிறகு, "அப்பாடா! நாம் ஒரு நல்ல காரியம் செய்தோம்" என்ற திருப்தியுடன் நிமிர்ந்தான்,

அப்பொழுது அந்த மாணவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் கல் கிடந்த இடத்தில் அதன் கீழே ஏதோ ஒரு துணி கிடப்பதைக் கண்டான் அவன்.

அது என்னவாக இருக்கும்?' என்று ஆச்சரியத்துடன் துணியை எடுத்துப் பிரித்தான், அதன்கீழ் ஒரு வெள்ளிக் கலசம் காணப்பட்டது. அவன் தன் இரு கைகளாலும் அந்த வெள்ளிக் கலசத்தை எடுத்துத் திறந்து பார்த்தான்.

அதனுள் நிறைய பொற்காசுகள் இருந்தன. அத்தோடு ஒரு சிறுதுண்டுக் காகிதமும் இருந்தது. 'சேவை மனப்பான்மை கொண்ட கரங்களுக்கு இந்தப் புதையல்' என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

'நான் இந்த ஊரைச் சேர்ந்தவனில்லை!

வெளியூர்க்காரனாகிய நான் இப்புதையலை எடுத்துக் கொள்வது முறையாகுமா?

இந்த மக்களுக்காகத்தானே அறிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது! அரசரிடமே இதை ஒப்படைத்து விடுவோம்' என்று எண்ணியபடி அவன் அந்தப் புதையலை எடுத்துக்கொண்டு அரசரிடம் விரைந்தான். அரசரைக் கண்டான்.

"அரசே! வீதியின் நடுவில் ஒரு கல் கிடந்தது. அது போக்குவரத்திற்கு இடையூறாக இருக்குமே என்று எண்ணி அதை அப்புறப்படுத்தினேன். அப்போது அந்தக் கல்லின் அடியில் இது இருந்தது. நானோ வெளியூர் மாணவன். எனக்கு ஒன்றும் தெரியாது" என்று கூறி அந்தப் புதையலை நீட்டினான்.

உடனே அரசர் "தம்பி! பயப்படாதே! இந்தப் புதையல் உனக்குத்தான். நான்தான் இந்தப் பரிசை வைத்தேன். சேவை மனப்பான்மை உடையவருக்கு அது கிடைக்கட்டும் என்றுதான் அப்படிச் செய்தேன். எங்கள் மக்களில் யாருக்குமே சேவை மனப்பான்மை கிடையாது. எனவே அவர்களுக்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை. வெளியூரிலிருந்து வந்த உனக்குச் சேவை மனப்பான்மை இருக்கிறது. அதனால் உனக்கு இந்தப் பரிசு கிடைத்திருக்கிறது" என்று கூறினார்.

பிறகு அமைச்சரை அழைத்து ஊர் மக்கள் அனைவரையும் திரட்டி அந்த மாணவனுக்குப் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அவனது பரந்த மனப்பான்மையையும், அவனுக்குக் கிடைத்த பரிசையும் எண்ணி எண்ணி ஊர் மக்கள் வியந்தனர்.

Post a Comment

0 Comments