Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வீண் கனவின் விளைவு - தமிழ் கதைகள்

அரபு நாட்டிலே பாக்தாத் மிகவும் வளமான நகரம். அதனைப் பணபலம் மிக்க பாதுஷா ஆண்டு வந்தார். அதில் தனவான்கள், கனவான்கள், வணிகர்கள் முதலான செல்வச் சீமான்கள் பலர் நிறைந்திருந்தனர். அங்குச் செல்வம் கொழித்தது. மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அகண்ட வீதிகள், அளவிலா விதவிதமான வாகனங்கள், காண்போர் கண்கவரும் கடை வீதிகள், விலை உயர்ந்த உடுப்பு அணிந்த ஆண்கள், பகட்டான பட்டாடையும் பளிச்சிடும் பொன்னும் மணியும் அணிந்த எழில் மிகு பெண்கள். இவை யாவும் அந்நகருக்கு அழகும் ஆடம்பரமும் ஊட்டின. ஆக மொத்தம் பாக்தாத் நகரின் சீரும் சிறப்பும் எளிதில் எடுத்து இயம்ப இயலாது. அச் சீர்மிகு பாக்தாத் நகரில் பல ஆண்டுகளுக்குமுன் அபூபக்கர் என்றொரு வணிகன் வாழ்ந்தான். அவன் பீங்கான், கண்ணாடி வியாபாரம் செய்பவன். நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால், பேராசை பிடித்தவன். அவன் தன் பீங்கான், கண்ணாடிச் சாமான்களை ஒரு கூடையில் வைத்து, தலையில் சுமந்து, தெருத் தெருவாய்ச் சுற்றி விற்பவன், வருமானம் அதிகமில்லை. சுமாரான சம்பாத்தியந்தான். அதனால் அவனுக்குப் பெரும் மனக்குறை. எனவே, சீக்கிரமாய்ச் செல்வச் சீமானாக அவாவுற்றான். எப்படியும் பணக்காரனாகத் துடித்தான்.

ஒரு நாள் நல்ல வெயில். அந்த வெப்பத்தில் ஊரைச் சுற்றி அலைந்து, சில பீங்கான் சாமான்களை விற்றான். களைப்பு மிகுதியால் சோர்ந்தான். ஒரு மரத்தடி நிழலில் கல்லின்மீது அமர்ந்தான். அருகில் தரையில் தன் காலடியில் பீங்கான், கண்ணாடிச் சாமான்கள் நிறைந்த கூடையை வைத்தான். நிம்மதியாய் ஓய்வு எடுத்தான். சில்லென்னு தென்றல் காற்று வீசிற்று. அபூபக்கர் அயர்ந்து தூங்கிவிட்டான். தன் வியாபாரம் பெருகி, தான் பெரும் பணக்காரன் ஆக வேண்டுமெனச் சதா கற்பனை செய்வது அவன் வழக்கம். அவன் சிந்தையில் அந்தப் பேராசை நிரந்தரமாய்க் குடிகொண்டிருந்தது. ஆகவே, அவன் தூக்கத்திலும் அந்த எண்ணமும், ஏக்கமுமே இன்பக் கனவாய் வந்தன. சுவையாய்க் கனவு காணத் தொடங்கினான்.

தெருத் தெருவாய்ச் சுற்றிச் சாமான்களை விற்ற அபூபக்கர், விரைவில் ஒரு கடையை அமர்த்தினான். அதில் மும்முரமாய்ப் பீங்கான், கண்ணாடி வியாபாரம் செய்யத் தொடங்கினான். நாளடைவில் வியாபாரம் பெருகி, ஒரு கடை, பல கடையாய் விரிந்தன. அடுத்து ஒரு பீங்கான் தொழிற்சாலையும் ஏற்படுத்தினான். அளவற்ற செல்வம் அவனை வந்தடைந்தது. அழகான மாளிகைகள், மகால்கள், பூங்காக்கள், தோட்டங்கள் அவனுக்குச் சொந்தமாயின. அவற்றைக் கண்ட பாதுஷா தாமே வலிய வந்து தமது ஒரே மகள் மஜ்னுவை அபூபக்கருக்கு ஆடம்பரமாய்த் திருமணம் செய்தார். அபூபக்கரை ஓர் இளவரசனாய் ஆக்கினார்.

இவ்விதம் செல்வச் செருக்கில் மிதந்தான் அபூபக்கர். தன்னை மறந்து இன்பத்தில் ஆழ்ந்தான். பாதுஷாவின் மகள் மஜ்னு. அபூபக்கரின் காலடியில் அமர்ந்து, அவனுக்குப் பணிவிடைகள் செய்தாள். அபூபக்கர் தன் அதிகாரத்தை இளவரசியிடம் காட்ட எண்ணினான். உடனே அவளைத் தன் காலால் எட்டி உதைத்துக் கண்டித்தான். அவன் தூக்கத்தில் இவ்விதம் கனவு கண்டு, காலைத் தூக்கி உதைக்கவே. அது அவன் காலடியில் வைத்திருந்த கூடைமீது பலமாகப் பட்டது. உடனே அந்தக் கூடை கீழே விழுந்து உருண்டது. அதிலிருந்த பீங்கான், கண்ணாடிச் சாமான்கள் யாவும் சிதறுண்டு உடைந்து நொறுங்கின. அச் சத்தம் கேட்ட அபூபக்கர், தன் கனவிலிருந்து பதறி விழித்து எழுந்தான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தனது மூலதனமான பீங்கான், கண்ணாடிச் சாமான்கள் யாவும் சுக்கல் நூறாய் தன் எதிரே உடைந்து கிடப்பதைக் கண்டான். அவன் கண்கள் கலங்கின. அவன் பேராசையால் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினான். காணக்கூடாத கனவெல்லாம் கண்டான். அதன் பலன், தனது வியாபாரப் பொருள்களான பீங்கான், கண்ணாடி எல்லாம் தன் காலடியில் தூள் தூளாய் உடைந்து சிதறிக் கிடக்கக் கண்டான், துக்கம் தாளாது தரையில் விழுந்து புரண்டு வாய்விட்டுப் புலம்பி அழுதான். தனது பேராசையால் தனக்குப் பெருநட்டம் ஏற்பட்டு, தனது பிழைப்பே பாழ்பட்டது கண்டு சிந்தை கலங்கிப் போனான். இறுதியில் சித்தப்பிரமை பிடித்து அலைந்தான்,

ஆசைக்கு ஓர் அளவு வேண்டும். பேராசையால் பெருநட்டம் ஏற்படும்.

 

Post a Comment

0 Comments